
அமெரிக்கா நாட்டை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கும் ஆப்பிள், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஸ்மார்ட்போன் விற்பனையிலும் ஆப்பிள் நிறுவனம் மிகவும் பிரபலமாக உள்ளது. அதிக சொத்து மதிப்பைக் கொண்ட நிறுவனமாக ஆப்பிள் நீண்ட காலமாக முன்னிலை வகித்து வந்தது. பங்குச் சந்தையில் அதன் சொத்து மதிப்பு தற்போது 1.2 லட்சம் கோடி டாலராகும்.
2018ஆம் ஆண்டில் 1 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டிய ஆப்பிள், இச்சாதனையை நிகழ்த்திய முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. மற்றொரு அமெரிக்க மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் வழங்கிய கடும் போட்டியையும் சமாளித்து சொத்து மதிப்பில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் அமர்ந்தது. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திலிருந்து முதலிடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனம் தனது முதலிடத்தை சவுதி அரேபியாவின் ’சவுதி அராம்கோ’ நிறுவனத்திடம் தற்போது இழந்திருக்கிறது.
சவுதி அரேபியாவில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனமாக உள்ள சவுதி அராம்கோ டிசம்பர் 11ஆம் தேதிதான் முதன்முறையாகப் பங்கு வர்த்தகத்தில் களமிறங்கி உள்ளது. அன்றைய முதல் நாளே அதன் சொத்து மதிப்பு 10 சதவீத வளர்ச்சியுடன் 1.9 லட்சம் கோடி டாலராக உயர்ந்தது. இதன்மூலம் ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக மதிப்பு மிக்க நிறுவனமாக சவுதி அராம்கோ முதலிடம் பிடித்துள்ளது.