குடியுரிமைச் சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி விவாதம் மூலம் பதிலளிக்க தயாரா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் (சிஏஏ), எவருடைய குடியுரிமையும் பறிக்கப்பட மாட்டாது. குடியுரிமை அளிப்பதற்காகத்தான் அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினாா்.

ஆனால் இதுகுறித்து பல கேள்விகள் நம்முன் இருக்கிறது. அதற்கு பதில் சொல்ல தான் யாரும் இல்லை. இது குறித்து தனது கட்டுரை ஒன்றில் பா.சிதம்பரம், தன் மீது விமர்சனங்களை முன்வைக்கும் 5 நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் தொலைக்காட்சியில் கேள்வி, பதில் விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தயாரா? இந்த விவாதத்தை மக்கள் நேரில் பார்த்த பின்னர் சிஏஏ தொடர்பான தங்களின் நிலைப்பாட்டை எடுக்கட்டும். இதற்கு பிரதமர் மோடி நிச்சயம் சாதகமான பதிலை அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
ஏனென்றால் பிரதமர் எப்போதும் விமர்சனங்களையும், கேள்விகளையும் தவிர்த்து தனது நிலைப்பாட்டை மட்டுமே பேசி வருகிறார். இதனால், யாராலும் பிரதமரிடம் நேரடியாக விமர்சனங்களை முன்வைக்க இயலவில்லை. ஆனால், நாங்கள் தினமும் ஊடகங்களைச் சந்தித்து அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.