
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது, இந்நிலையில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக அதிகரிக்க தொடங்கியது. இடையில் வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உருவான புயல்களால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மழையின் அளவு குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் வெப்பசலனம் மற்றும் காற்று மேலடுக்கின் சுழற்சி காரணத்தால் தமிழகம் முழுவதும் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. இது மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனிடையே நான்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய இருப்பதாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய இருப்பதாக கூறினார்.
நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீச இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுரை கூறியுள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறிய அவர் நகரின் சில இடங்களில் மழை பெய்யும் என்றார்.