சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கனவு அணி மற்றும் சிறந்த வீரர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஐ.சி.சி சிறந்த வீரர்களுக்கான விருதினை வழங்கி வருகிறது. அதேபோல், 11 பேர் கொண்ட கனவு அணியையும் தேர்ந்தெடுக்கும்.
இதில் ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய வீரர்கள் கனவு அணியில் இடம்பெறுவர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளுக்கு, ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரிலியா வீரர் ஸ்மித்துக்கு எதிரான கோஷத்துக்கு மைதானத்தில் ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். அதனை பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
அதே போல், சிறந்த ஒருநாள் வீரராக இந்தியாவின் ரோஹித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 28 ஒருநாள் போட்டிகளில் 1,490 ரன்கள் எடுத்து சராசரியாக 57.30 வைத்துள்ளார்.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆண்டின் சிறந்த வீரருக்கான ”சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்” விருதை தட்டிச் சென்றார்.

23 இன்னிங்ஸில் 59 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் சிறந்த ”டெஸ்ட் கிரிக்கெட் வீரராக” தேர்வு செய்யப்பட்டார்.
எமர்ஜிங் வீரராக மார்னஸ் லாம்பஷே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 10 டெஸ்ட் போட்டிகளில் 1,022 ரன்கள் குவித்துள்ளார்.
டி20-யில் சிறந்த பங்களிப்பு அளித்ததற்காக இந்தியாவின் தீபக் சஹர் தேர்வு சியப்பட்டுள்ளார். இவர் வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்ரிக் உடன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
2019-ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளும் அறிவிக்கப்பட்டன. இதில், இந்திய கேப்டன் விராட் கோலி இரு அணிகளின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி 2019 டெஸ்ட் அணி: மயங்க் அகர்வால், டாம் லாதம், மார்னஸ் லாம்பஷே, விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், பி.ஜே.வாட்லிங், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நீல் வேக்னர், நாதன் லயன்.
ஐசிசி 2019 ஒருநாள் அணி: ரோஹித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோ, விராட் கோலி (கேப்டன்), ஜோ ரூட், ஜாஸ் பட்லர், ராஸ் டெய்லர், பென் ஸ்டோக்ஸ், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான், ரஷித் கான், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா.