ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கிழித்து முழக்கமிட்ட மாணவியின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தைப்பெற்று வருகிறது. பெரும்பாலான போராட்டங்களை மாணவர்கள் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் டெப்ஸ்மிதா என்ற மாணவி தனது முதுநிலை படிப்பிற்கான பட்டத்தை பெற்றுக்கொண்டார். அப்போது, மேடையிலேயே குடியுரிமை சட்ட நகலினை கிழித்து இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிட்டார். இவர் பன்னாட்டு உறவுகள் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “எந்த குழப்பமும் இங்கு ஏற்படவில்லை. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு நான் அவமானத்தை ஏற்படுத்தி தரவில்லை. எனக்கு பிடித்த நிறுவனத்தில் பட்டம் வழங்கப்பட்டதை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான எனது எதிர்ப்பை பதிவு செய்ய நான் இந்த மேடையைத் தேர்ந்தெடுத்தேன். அதே போல எனது நண்பர்கள் பட்டமளிக்கும் விழா நடைபெறும் இடத்தின் வாயிலின் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.