நாடு முழுவதும் மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணி அடுத்த ஆண்டு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. பின்னர் 2015ஆம் ஆண்டில் மீண்டும் ஆய்வு நடத்தி, கணினிமயமாக்கும் பணி தொடங்கியது.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம்வரை அசாம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இப்பணி நடத்த பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க ரூ.3,941.35 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மாநிலங்களில் ஒரே பகுதியில் 6 மாதங்களும், அதற்கு மேலும் வசிப்பவர்கள் அல்லது அந்த பகுதியில் இனிவரும் 6 மாதங்களுக்கு மேல் வசிக்க நினைப்பவர்கள், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இடம்பெற தகுதி உடையவர்கள் ஆவர். இதில் பதிவு செய்வது ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இந்திய குடிமகனையும் அடையாளம் காணும் விரிவான தகவல் தொகுப்பு உருவாக்குவதே தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் நோக்கம் என்று மத்திய அரசு கூறுகிறது. குடியுரிமை சட்டம் 1955-ன்படி, ஒவ்வொரு கிராமம், சிறு நகரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பதிவேடு தயாரிக்கப்படும். இதில், பயோ மெட்ரிக் விவரங்களும் இடம்பெறும். கடந்த ஆகஸ்டு மாதம் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.