தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் விளங்கி வந்த ஆர் எஸ் சிவாஜி இன்று காலமாகி இருக்கிறார். நடிகரும் தயாரிப்பாளருமாக திகழ்ந்து வந்த எம் ஆர் சந்தானம் அவர்களின் மகனும், நடிகர் சந்தான பாரதியின் சகோதரர்தான் ஆர் எஸ் சிவாஜி என்பது குறிப்பிடத்தக்கது. 67 வயதாகும் இவர் சென்னையில் இன்று மாளடைப்பால் காலமானார். 1981 ஆம் ஆண்டு தனது சகோதரர் இயக்கிய பன்னீர் புஷ்பங்கள் என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் கமலஹாசன் உடன் இணைந்து நடித்திருக்கிறார். 1989 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் “தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க” என்று ஜனகராஜிடம் இவர் கூறும் வசனங்கள் மூலமாக பிரபலமானார்.

அன்று தொடங்கி இன்று வரை பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, சாய் பல்லவி நடித்த கார்கி போன்ற படங்களில் நடித்த அவர் நேற்று வெளியான லக்கி மேன் படத்தில் யோகி பாபு உடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியின் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிக்கு கூட சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். இந்த நிலையில் அவர் இன்று சென்னையில் காலமான நிலையில், அவரது நண்பர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

அதில், “எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர்… pic.twitter.com/XEmLhU0nxK
— Kamal Haasan (@ikamalhaasan) September 2, 2023