தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் ‘மிக்ஜாம்’ புயல் சென்னை மாநகரையே புரட்டிப் போட்டு இருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 30 செ.மீக்கும் அதிகமான மழை கொட்டி தீர்த்ததால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி காட்சியளித்தன. இந்த பேரிடரிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த பேரிடராக தமிழகத்தின் தென் பகுதியில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. திடீரென சூழ்ந்த மேகங்கள் தென்திசை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் 80 செ.மீக்கும் அதிகமான மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்து இருக்கிறது.

மேலும் பல ஆற்றுப் பாலங்கள் உடைந்தும், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியும், போக்குவரத்து தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பல ஊர்களில் இருந்து தென் தமிழகம் நோக்கி சென்ற ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டு இருக்கிறது. பல இடங்களில் மின் இணைப்பும், இணையதள சேவையும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வெள்ள மீட்பு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது.

கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்“ என்று பதிவிட்டுள்ளார்.
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை…
— Mari Selvaraj (@mari_selvaraj) December 18, 2023
Twitter Original Source From: Mari Selvaraj