நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது இணையத்தில் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி அளித்த போது, “லியோ படத்தில் நடித்த தனக்கு த்ரிஷாவுடன் ஒரு காட்சி கூட இல்லை என்றும், அவருடன் ரேப் சீனில் நடித்த மிகுந்த ஆவலாக இருந்ததாகவும் சர்ச்சைக்குரிய விதமாக பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நடிகை திரிஷாவே தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு எதிராக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து த்ரிஷாவிற்கு ஆதரவாக பலரும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட மன்சூர் அலிகான் பேச்சை கண்டித்து இருந்தார். இந்த நிலையில் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மூத்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். திரைத்துறையில் பெண்கள் நுழைவதும், சாதிப்பதும் இன்னமும் சவாலாகவே இருக்கும் சூழலில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகள் பற்றி இப்படி மோசமான கருத்துக்களை தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தென்னிந்திய சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் பக்கம் நிற்கும்.
சக நடிகர்களை பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக் குறைவாக பேசிய மன்சூர் அலிகான் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அதிர்ச்சி அளிக்கும் அவரின் இந்த போக்கு கவலையையும், கோபத்தையும் உண்டாக்குகிறது. ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பொறுப்பை உணர்ந்து அவர் பேச கற்றுக் கொள்ள வேண்டும். மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது தான் உதிர்க்கும் கருத்துக்களும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அதே ஊடகம் முன்பு, உண்மை மனதுடன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்.
இக்கீழ்செயல் காரணமாய் தன் தவறை உணர்ந்து மனம் வருந்தி உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது. இந்நிகழ்வினை உதாரணாமாக வைத்து வரும் காலங்களில் மற்ற நடிகர்களும் பொதுவெளியில் கருத்துக்கள் பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த தனிநபர் விமர்சனம் மட்டுமல்லாது வெகு நாட்களாக பொதுக்கூட்டங்களின் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல பொய்க் கதைகளையும், திருத்த நிகழ்வுகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரில் பரப்பி பரபரப்பை உண்டாக்கிக் கொள்கின்றனர்.
இதில் சோகமும் கோபமும் இத்துறை சார்ந்தவர்களே அவற்றை தொகுத்து வழங்குவது தான். மென்மே மனம் படைத்தவர்கள் என்பதனால் ஒவ்வொரு முறையும் நடிகர் சமுதாயத்தினர் இலக்காக்கப்படுவது இனியும் நிகழாது தீவிரமான எதிர்வினைகள், சாத்வீகமான முறையில் தொடுக்கப்படும் என்பதை தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த சூழலில் தெரிவித்துக் கொள்கிறது” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.