
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்து கொண்டது என தன் முடிவை அறிவித்தது.
அத்துடன் டெல்லியில் உள்ள தங்கள் நாட்டு தூதரை திரும்ப அழைத்தும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்பி வைத்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தையும் தடை செய்தது. வாகா எல்லையையும் மூடியது.
தொடர்ந்து இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்திக்கொள்வதாக பாகிஸ்தான் அரசு கடந்த அக்டோபர் மாதம் திடீரென தனது முடிவை அறிவித்தது. எந்த ஒரு நோட்டீசும் வழங்காமல் தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியிருப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரானது என மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்த நிலையில் தனது உத்தரவை திரும்ப பெறும் விதமாக இந்தியாவுடனான தபால் சேவை மீண்டும் தொடரும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதேநேரம் இந்தியாவில் இருந்து வரும் பார்சல்களுக்கான தடை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளன.