பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை மிகப்பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படம் எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை பலரும் படித்துள்ளனர். ஆனால் சிலருக்கு இந்த கதையில் வரும் கதை மாந்தர்கள் பற்றிய அறிமுகம் இருக்காது. எனவே கதையில் வரும் முன்னணி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி இந்த தொகுப்பை காணலாம்.

முதலில் வருபவர் சுந்தரச் சோழர். இவர் தான் சோழ தேசத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் சக்கரவர்த்தி. இவருக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. முதல் புதல்வர் ஆதித்த கரிகாலர், இரண்டாவது புதல்வி குந்தவை, மூன்றாவதாக பொன்னியின் செல்வரான ராஜராஜ சோழன். சுந்தரச் சோழருக்கு இரண்டு கால்களும் செயலிழந்து விட்டதால், அடுத்த பட்டத்திற்கு யார் வரவேண்டும் என்ற போட்டியில் தான் கதை நகர்கிறது. சுந்தரச் சோழர் கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.
அடுத்த முக்கியமான கதாபாத்திரம் ஆதித்த கரிகாலர். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். இவர் சுந்தரச் சோழருக்கு பிறகு அரியணை ஏற இருக்கும் பட்டத்து இளவரசர் ஆவார். சோழ மன்னர்கள் வடக்கில் வடபெண்ணை ஆற்றங்கரை வரை சோழ தேசத்தை விரிவுபடுத்தி இருப்பர். வடக்கில் காஞ்சியில் பொன் மாளிகை கட்டி அங்கு வடதிசையின் தளபதியாக இருப்பார். வந்தியதேவனை தஞ்சாவூருக்கு ஓலை கொடுத்து அனுப்புவார். அங்கிருந்து தான் நாவல் தொடங்குகிறது. நந்தினி என்பவளை ஒரு தலையாக காதலித்து வருவார்.
அடுத்த கதாபாத்திரம் குந்தவை. இந்த கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார். இவர் ஆதித்த கரிகாலனின் தங்கை மற்றும் ராஜராஜ சோழனின் அக்கா ஆவார். இவர் தஞ்சையில் சுந்தரச் சோழருடன் இணைந்து ஆட்சி நடத்திக் கொண்டிருப்பார். இவரின் பேச்சை இராஜராஜ சோழன் மீறவே மாட்டார். குந்தவையின் வாக்கை வேத வாக்காக கருதுவார். அந்த அளவிற்கு செல்வாக்கு பொருந்திய ஒரு கதாபாத்திரம்.
கதையின் முக்கிய கதாபாத்திரமாக வருபவர் ராஜராஜ சோழன்.இந்த கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். இவர் சுந்தர சோழனின் கடைசி மகன் ஆவார். ஆதித்த கரிகாலர் எப்படி காஞ்சியில் தங்கி வடதிசைக்கு தளபதியாக இருப்பாரோ, அதேபோல் இவர் தென்திசையில் ஈழத்தில் இருந்து கொண்டு தென்திசை நாடுகளுக்கு தளபதியாக இருப்பார். இவர் குழந்தையாக இருந்தபோது காவிரி நதியில் தவறி விழுந்து விடுவார். அப்போது ஒரு கை இவரை மேலே எடுத்துக் கொடுக்கும். பொன்னி நதியே இவரை காப்பாற்றிக் கொடுத்ததால் பொன்னியின் செல்வன் என்ற பெயர் ஏற்பட காரணமாயிற்று. ஆதித்த கரிகாலனுக்கு பிறகு அரியணை ஏறி சோழ தேசத்தை சிங்கப்பூர், மலேசியா, சுமத்ரா, ஜாவா தீவுகள், தாய்லாந்து வரை விரிவு செய்த பெருமை இவருக்கும், இவரது மகன் ராஜேந்திர சோழனுக்கும் உண்டு.
அடுத்தபடியாக கதையின் கதாநாயகன் வந்தியத்தேவன். இவர் ஆதித்த கரிகாலரின் உற்ற நண்பன். சோழ மன்னர்கள் அனைவரின் நம்பிக்கைக்கு உரியவன். ஆதித்த கரிகாலன் தனது தந்தைக்கும், சகோதரிக்கும் ஒரு முக்கியமான செய்தியை கூறுவதற்காக ஓலையை கொடுத்து ஒற்று வேலை பார்ப்பதற்காக வந்திய தேவனை ஒற்றனாக அனுப்பி இருப்பார். இவர் சோழர்களுக்கு முன்பாக வட திசைகளை ஆண்ட வாணர் குலத்தைச் சேர்ந்தவன். மேலும் இவர் ராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவையின் காதலன். இந்த கதையின் கதாநாயகனும் இவரே. இந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் நடித்துள்ளார்.
அடுத்தபடியாக பழுவேட்டரையர்கள் இதில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும் சின்ன பழுவேட்டரையராக நடிகர் பார்த்திபன் நடித்திருக்கிறார்கள். பழுவேட்டரையர்கள் என்பவர்கள் சோழர்களுக்கு உதவி புரியும் குறுநில மன்னர்கள். இவர்களும் சுந்தரச் சோழரின் அரண்மனையிலேயே தனியாக அரண்மனை கட்டிக்கொண்டு வாழ்பவர்கள். ஒரு கட்டத்தில் சோழர்களுக்கு எதிராக அரியணையைப் பிடிக்கும் ஆசை கொண்டு சோழர்களுக்கு எதிராகவே சதித்திட்டம் தீட்டுபவர்கள். சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் நிதி மற்றும் வருவாய் துறை அமைச்சராக பெரிய பழுவேட்டரையர் இருந்தார். அரண்மனை தளபதியாக சின்ன பழுவேட்டரையர் இருந்தார். இவரின் அனுமதி இன்றி யாரும் சுந்தரச் சோழரை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு செல்வாக்கு பொருந்தியவராக பழுவேட்டரையர்கள் இருந்தார்கள்.
அடுத்தபடியாக நந்தினி. இந்த கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இவர் வயதான காலத்தில் பெரிய பழுவேட்டரையர் மனைவியாக இருப்பவர். பழுவூர் இளையராணி என்று அழைக்கப்படுபவர். அழகுக்கு பெயர் போனவர். இவர் அழகை கல்கி மிக அழகாக வடிவமைத்து இருப்பார். ஆதித்த கரிகாலரின் காதலியாக இருந்தவர். பின்னாளில் பழுவேட்டரையர்களுடன் இணைந்து, சோழ தேசத்திற்கு எதிராக திட்டம் தீட்டுபவள். சோழர்களின் எதிரியான பாண்டிய நாட்டைச் சேர்ந்த சேர்ந்தவர். கல்கி உருவாக்கிய கற்பனை கதாபாத்திரத்தில் இவரும் ஒருவர்.
ஆழ்வார்கடியான் நம்பி இவரும் இந்த கதையின் முக்கிய கதை மாந்தராவார். இவர் சோழ தேசத்தில் நம்பிக்கைக்குரிய ஒற்றனாக இருப்பார். சுந்தரச் சோழரின் பெரியம்மா செம்பியன் மாதேவிக்கும், சுந்தர சோழரின் முதலமைச்சர் அனிருத்த பிரம்மராயிருக்கும் சீடனாகவும் ஒற்றனாகவும் இருப்பார். வந்தயத்தேவனுடன் கடைசி வரைக்கும் பயணிக்கும் கதாபாத்திரம். இவரும் கல்கி உருவாக்கிய கற்பனை கதாபாத்திரத்தில் ஒருவரே.
வானதி பழுவேட்டரையர்கள் போலவே சோழ தேசத்தின் குறுநில மன்னர்களில் ஒருவராக இருந்த கொடும்பாளூர் வம்சத்து இளவரசியாவார். சிறுவயதிலேயே தந்தை தயாயை இழந்த அவர் தஞ்சாவூர் அரண்மனையில் வசிப்பார். குந்தவையின் நெருங்கிய தோழியாக இருப்பார். பொன்னியின் செல்வர் மீது காதல் கொள்ளும் வானதி, பின்னாளில் அவரை மணந்து ராஜராஜ சோழனுக்கு மனைவியாகவும், ராஜேந்திர சோழனுக்கு தாயாகவும் விளங்குவார்.
இறுதியாக பூங்குழலி, இலங்கையில் போர் செய்து கொண்டிருந்த ராஜராஜ சோழனை காண வந்தியத்தேவன் கடலை கடக்க பயந்து கொண்டிருந்த போது, படகை எடுத்துக் கொண்டு வந்தியதேவனை இலங்கைக்கு அழைத்து சென்றவள். மீண்டும் பொன்னியின் செல்வருக்கு ஆபத்து ஏற்ப்பட்ட போது இலங்கையில் இருந்து படகு தள்ளிக் கொண்டு தமிழகம் அழைத்து வந்தவர். துணிச்சல்காரி. கல்கியின் கைவண்ணத்தில் உருவான மிக அழகான கற்பனை கதாபாத்திரத்தில் முதலிடம் நந்தினிக்கு என்றால், இரண்டாவது இடம் பூங்குழலிக்கு தான்..