எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது தான் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த திரைப்படம் இன்று காலை 4:00 மணி முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். 1950 களில் கல்கியின் கைவண்ணத்தில் உருவானது தான் பொன்னியின் செல்வன். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது இன்று படமாக்கப்பட்டுள்ளது. பலர் இந்த படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பின்னர் கைவிட்டனர். ஆனால் மணிரத்தினம் இதை படமாக இயக்கி சாதனை புரிந்துள்ளார். 70 ஆண்டுகால எதிர்பார்ப்பினை சோழர்கள் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? என்பது குறித்து தற்போது முழுமையாக காணலாம்.

தஞ்சையில் இருந்து சோழதேசத்தை ஆண்டு வரும் சுந்தர சோழருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் ஆதித்த கரிகாலன், இரண்டாவது குந்தவை, மூன்றாவதாக அருள்மொழிவர்மன். இதில் ஆதித்த கரிகாலன் மிக வீரமானவர். வட திசையில் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்து வடக்கிலிருந்து வரும் படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடி வருபவர். இவருடைய நண்பன் தான் வந்தியத்தேவன். தந்தைக்கு எதிராக சோழ நாட்டிற்கு சதி நடக்கவிருப்பதை அறிந்து கொள்ளும் ஆதித்த கரிகாலன், தந்தைக்கும் தனது தங்கை குந்தவைக்கும் ஒரு ஓலையை வந்தியத்தேவனிடம் கொடுத்து தஞ்சைக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சென்று தந்தையிடம் அரசுக்கு எதிராக நடக்கும் சதியை குறித்து எச்சரிக்குமாறு ஆணையிடுகிறார்.
இதனால் ஒற்று வேலை பார்ப்பதற்காக தஞ்சைக்கு வரும் வந்தியதேவன் தஞ்சைக்கு செல்வதற்கு முன்பாக கடம்பூர் சம்புவரையர் மாளிகையை அடைகிறார். அங்கு சுந்தர் சோழருக்கு எதிராக நடக்கும் சதி ஆலோசனைகளை பற்றி ஒளிந்திருந்து கண்டு கொள்கிறார். இந்த சதி ஆலோசனையில் பழுவேட்டரையர்கள் உட்பட பல குறுநில மன்னர்கள் பங்கெடுத்திருக்கின்றனர். பின்னர் தஞ்சைக்கு வரும் வழியில் நந்தினியை சந்திக்கிறார் வந்தியதேவன். அவர் மூலமாக தஞ்சை கோட்டைக்கு உள்ளே வருகிறார். அங்கு சுந்தர சோழரை சந்தித்து சோழ குலத்திற்கு வரும் ஆபத்தை எடுத்துரைக்கிறார். பின்னர் குந்தவையை சந்திக்கும் அவர் அவரிடமும் ஆதித்த கரிகாலர் கொடுத்த ஓலையை கொடுக்கிறார். மேலும் குந்தவை மீது காதலிலும் விழுகிறார். அண்ணன் ஆதித்த கரிகாலர் கொண்டு வந்த செய்தியை வாங்கிக் கொண்ட குந்தவை, வந்திய தேவனை ஈழத்திற்கு அனுப்பி வைக்க விரும்புகிறார். அங்கு தனது தம்பி அருள்மொழிவர்மரை எப்படியாவது தஞ்சைக்கு அழைத்து வரும்படி அவர் வந்தியதேவனுக்கு ஆணையிடுகிறார்.
வந்தியத்தேவன் ஈழத்திற்கு செல்வதற்கு பூங்குழலி என்னும் ஓடப்பெண் உதவுகிறார். அவருடன் சேர்ந்து இலங்கைக்கு செல்லும் வந்தியத்தேவன் அருள்மொழிவர்மனை சந்திக்கிறார். அங்கு அவருக்கு இருக்கும் ஆபத்துகளையும், அதிலிருந்து அவரை மீட்பது குறித்தும் வந்திய தேவன் சிந்திக்கிறார். மேலும் பாண்டிய நாட்டைச் சேர்ந்த எதிரிகள் அருள்மொழிவர்மனை கொல்ல ஈழத்திற்கு வருகிறார்கள். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்தார்களா? வந்திய தேவனுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் என்ன ஆனது? நந்தினியின் சூழ்ச்சியில் சோழதேசம் என்ன ஆனது என்பதே படத்தின் முதல் பாகத்தின் மீதி கதை.
முதலில் கல்கிக்கும் மணிரத்தினத்திற்கும் நன்றிகளை நாம் கூறியதாக வேண்டும். இத்தகைய மிகப்பெரிய படைப்பை சோழர்களின் வரலாற்றை கொடுத்த கல்கிக்கு நாம் நன்றியையும், இதை திரைப்படமாக எடுத்து மக்களுக்கு விருந்தளித்த மணி ரத்னத்திற்கும் நமது வணக்கத்தையும் கூறிய ஆக வேண்டும். மணிரத்னம் இயக்கம் பட்டையை கிளப்பி இருக்கிறது. ஜெயமோகன் குமரவேல் மணிரத்தினத்தின் திரைக்கதை ஆகியவை படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. ரசிக்கக் கூடிய வகையில் வசனங்கள், அருமையான கதாபாத்திரங்கள் என்று மணிரத்தினம் இந்த கதையை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்.
விக்ரமின் நடிப்பு, காதல் தோல்வி, கோபம், வீரம், சோகம் என சிறப்பாக நடித்த அசத்தியிருக்கிறார். அடுத்ததாக அருள்மொழிவர்மன் இவர் ஆதித்த கரிகாலரைப் போல் அல்லாமல் நிதானத்தை கடைபிடிக்கும் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார், ராஜராஜ சோழனாக பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். குந்தவையாக நடித்துள்ள திரிஷா ஆண்களை அடக்கி ஆளும் ஆளுமையில் உயர்ந்து நிற்கிறார். திரிஷாவின் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது. தன் கண்களிலாலேயே வில்லத்தனங்களை நடத்தும் நந்தினி ஆக ஐஸ்வர்யா ராய் தான் ஒரு நடிப்பு அரக்கி என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். நந்தினியின் சூழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், ஆழ்வார்கடியானாக நடிகர் ஜெயராமும் மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்து விட்டனர்.
பாசிட்டிவ் விஷயங்கள்:
நெகட்டிவ் விஷயங்கள்
படத்தின் கதையைப் பார்க்கும் ஆர்வத்தில் நெகட்டிவ் விஷயங்கள் எல்லாம் மறந்து பொன்னியின் செல்வன் நம் மனங்களில் அழியாத இடத்தை பிடிக்கின்றது. பொன்னியின் செல்வன் படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.75/5