
மத்திய அரசின் இயற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் பரவலாக எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது.
இதனால், டெல்லியின் ராஜ்காட் பகுதியில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வருமாறு மாணவர்கள், இளைஞர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பக்கதில் கூறியிருப்பது என்னவென்றால், “மாணவர்களே, இளைஞர்களே நீங்கள் இந்தியர்களாக உணர்ந்தால் மட்டும் போதாது. இது போன்ற தருணத்தில், நீங்கள் இந்தியர்கள் என காட்டுவதோடு மட்டுமல்லாமல், வெறுப்புணர்வால் இந்தியாவை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை நீங்கள் வெளிக்காட்டுவது மிகவும் முக்கியமானது.
மோடி மற்றும் அமித்ஷா போன்றவர்களிடமிருந்து எறியப்பட்ட வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக ராஜ்காட்டில் இன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.