இயக்குனர் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கார்கி. படத்தை பார்த்த பலரும் மனதார பாராட்டி வருகின்றனர். கதையை பொறுத்தவரை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சாய்பல்லவி, தனது தாய், தந்தை, தங்கையுடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவரது தந்தை ஒரு அப்பார்ட்மெண்டில் வாட்ச் மேனாக வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் 9 வயது சிறுமியை நான்கு வட மாநில இளைஞர்கள் கடத்தி பலாத்காரம் செய்து விடுகின்றனர். அப்போது அப்பார்ட்மெண்ட் வாட்ச் மேனாக இருக்கும் சாய் பல்லவியின் தந்தையும் இந்த வழக்கில் கைது செய்யப்படுகிறார். இறுதியில் என்ன ஆனது? யார் இந்த குற்றத்தை செய்தார்கள், உண்மையான குற்றவாளி யார்? தனது தந்தையை மீட்க சாய்பல்லவி நடத்தும் சட்ட போராட்டம் பற்றிய கதை தான் கார்கி.பல எதிர்பாராத திருப்பங்களை கொண்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து உள்ளங்களை கொள்ளை கொண்ட சாய்பல்லவி இந்த படத்தில் கண்ணியமிக்க கார்கியாக உயர்ந்து நிற்கிறார். தான் சிறுமியாக இருந்த போது தனக்கு நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் பற்றி கற்றுக் கொடுத்த தனது தந்தை சிறையில் இருக்கும் போது அவரது முகத்தை கூட பார்க்க முடியாமல் சாய் பல்லவி அழும் காட்சிகளில் நடிப்பில் பின்னி இருப்பார். என் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை, நீங்க விரும்புறத போடுறது செய்தி இல்ல, நடந்தத போடுறதுதான் செய்தி என்று மீடியாக்களிடம் அவர் சொல்லும் காட்சி சில மீடியாக்களுக்கு நெத்தியடியாக இருக்கும்.
சாய் பல்லவிக்காக எந்த வக்கீலும் வாதாட முன் வராத நிலையில் காளி வெங்கட் வக்கீலாக வந்து நடிப்பில் அசத்தி எடுத்து இருக்கிறார்.

நீதிபதியாக நடித்த திருநங்கை சுதாவின் வசனங்களில் தீப்பொறியாக உள்ளது. பெண்ணின் உடல் வலியும் புரியும், ஆணின் திமிரும் எனக்கு தெரியும் என்று அனல் தெறிக்கும் வசனங்கள். இந்த படத்தின் இயக்குனர் கௌதம் ராமசந்திரன், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு தரமான படைப்பாளி. க்ளைமாக்ஸில் இப்படி ஒரு ட்விஸ்ட் கொடுக்க முடியுமா என்று அனைவரையும் ஒரு நிமிடம் உறைய வைத்து இருக்கிறார் இயக்குனர். தரமான படங்களை நடித்தும், அதை வாங்கி வெளியிடும் சூர்யாவிற்கும், விநியோகம் செய்யும் சக்திவேலன் ஃபிலிம் பேக்டரிக்கும் நமது வாழ்த்துக்களை சொல்லியே ஆக வேண்டும். பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். வெகுநாட்களுக்குப் பிறகு தரமான படத்தை பார்த்த ஒரு திருப்தி.