இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் அயோத்தி படத்தை பார்த்துவிட்டு தற்போது நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இருக்கிறார். அதற்கு நடிகர் சசிகுமார் நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்து இருக்கிறார். அறிமுக இயக்குனர் ஆர் மந்திரமூர்த்தி இயக்கிய திரைப்படம் தான் அயோத்தி. இந்த படத்தில் நடிகர் சசிகுமார், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அயோத்தி நகரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு ஹிந்தி குடும்பம் சுற்றுலாவிற்காக வருகிறது. அதில் குடும்பத் தலைவர் தனது குடும்பத்தை அடக்கி ஆள நினைக்கும் ஒரு கொடூரமானவராக இருக்கிறார். அவரது தவறான செயலால் கார் விபத்திற்கு உள்ளாகிறது. அப்போது அந்த குடும்பத் தலைவி விபத்தில் மரணம் அடைந்து வருகிறார். தமிழ் தெரியாமல் இந்தி மட்டுமே பேச தெரிந்த குடும்பம் என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நின்று கொண்டிருக்கிறது.

விபத்துக்குள்ளான கார் டிரைவரின் நண்பராக இருக்கும் சசிகுமாரும் புகழும் அந்த ஹிந்தி குடும்பத்திற்கு உதவ முன் வருகின்றனர். விமானத்தில் அந்த உடலை அனுப்ப முயற்சி செய்யும்பொழுது அவர்கள் பல கஷ்டங்களை சந்திக்கிறார்கள். அனைத்தையும் மீறி சசிகுமார் இறந்த அந்த உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தாரா? அந்த ஹிந்தி குடும்பத்திற்கு எப்படி முயற்சி செய்து தன்னால் முடிந்த உதவிகளை செய்தார்? என்கிற நெகிழ வைக்கும் கருத்தை இந்த படம் அழகாக விளக்கியிருந்தது. எந்த ஆடம்பரமும் விளம்பரமும் இல்லாமல் எளிமையான முறையில் எடுக்கப்பட்ட பலரின் உள்ளங்களை கவர்ந்தது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் கண் கலங்கி தங்களது விமர்சனங்களை கூறியிருந்தனர். இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டாரும் “நண்பர் சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம் முதல் படத்திலேயே தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்று நிரூபித்திருக்கிறார் மந்திரமூர்த்தி, தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்து இருக்கும் சசிகுமார், “நடிகர் எனக் குறிப்பிடாமல் நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் சார், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்து பாராட்டியது, நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது, மிக்க நன்றி சார்..!” என்று சசிகுமாரும் அவருக்கு பதில் அளித்திருக்கிறார். அயோத்தி படத்தில் சசிகுமாரின் கதாபாத்திரம் அப்துல்மாலிக், இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. ரஜினியும் லால் சலாம் படத்திலும், தலைவர் 170 படத்திலும் இஸ்லாமிய பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாட்ஷா படத்திற்கு பின்னர் சூப்பர் ஸ்டார் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர் மத்தியில் எதிர்பார்க்கும் எகிறி இருக்கிறது.!