மறைந்த நடிகர் மாரிமுத்து குறித்து தற்போது சூர்யா தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். நேருக்கு நேர் படத்தில் தன்னுடன் உறுதுணையாக இருந்த உதவி இயக்குனர்களில் ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 57 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார் நடிகர் மாரிமுத்து. கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியிருந்த இவர் பின்னர் நடிப்பில் மட்டும் ஆர்வம் செலுத்தி வந்தார். விக்ரம், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் ஆதரவை பெற்றவராக விளங்கி வந்தார்.

பல வருடங்களுக்குப் பிறகு மாரிமுத்துவிற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது எதிர்நீச்சல் சீரியல் மூலமாகத்தான். இந்த சீரியலுக்குப் பிறகு அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. “தான் இப்போதுதான் நிறைவாக உணர்கிறேன், தனக்கு பல பட வாய்ப்புகள் வருகிறது, தான் வெளியில் செல்லும் பொழுது என்னை அடையாளம் கண்டு பலரும் என்னை என்னிடம் பேசும் பொழுது என் மனைவியின் முகத்தில் வரும் சந்தோஷத்தை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது” என்று ஒரு பேட்டியில் பேசி இருந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு நீடிக்காத வகையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், தற்போது நடிகர் சூர்யா அவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
அதில் அவர், “மாரிமுத்து சாரின் மறைவுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இது தனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய நலன் விரும்பியாக இருந்தவர் மாரிமுத்து. நேருக்கு நேர்படத்தில் எனக்கு உதவிய உதவி இயக்குனர்களில் ஒருவர். மிக நன்றாக பேசக்கூடியவர். இந்த உலகத்தை சிரிப்பாகவும், நட்பாகவும் மாற்றக்கூடிய ஒரு வேடிக்கையான பக்கத்தை தன்னுள் கொண்டிருந்தார் உங்களை மிகவும் மிஸ் செய்வேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.!