வட இந்தியாவில் பல பகுதிகளில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த உடலை கைகளிலேயும், தோள்களிலேயும் சுமந்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம்தான். அப்படித்தான் உத்தர பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மனதை உருக்கும் அந்த சம்பவம் குறித்து தற்போது பார்க்கலாம். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு வயது குழந்தையின் வளர்ப்புத் தாய், குழந்தை இடைவிடாது அழுது கொண்டிருந்ததால் அதனை காரின் முன்பாக தூக்கி வீசி இருக்கிறார். இதனால் அந்த குழந்தை அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. மேலும் இதுகுறித்து தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வளர்ப்புத் தாயை உடனே கைது செய்து சென்று விட்டனர். தொடர்ந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்த நாள் குழந்தையின் தந்தை மற்றும் அவரது 10 வயது சகோதரன் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்தனர்.

குழந்தையின் உடலை பெற்றுக் கொண்ட தந்தை அங்கிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சொந்த கிராமத்திற்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்ய அங்குள்ள அதிகாரிகளிடம் வேண்டினார். ஆனால் ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என்பதால் அவரால் தன்னால் செலவு செய்ய முடியாது என்றும், ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதிகாரிகள் யாரும் இதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் பொறுத்து பொறுத்து பார்த்த அந்த குழந்தையின் தந்தை, உடலை கையிலேயே சுமந்தபடி தன்னுடைய 10 வயது மகனுடன் நடக்க ஆரம்பித்துள்ளார். சிறிது தூரம் சென்ற பின்னர் அந்த 10 வயது சிறுவன் இறந்த தனது இரண்டு வயது தம்பியின் உடலை தாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். இதை பார்த்த மக்கள் சிலர் வீடியோ எடுக்க தொடங்கினர்.
Ambulance not received Father got tired then 10 years old son got dead body. The picture of the innocent child wandering about by the corpse of a 2 Year-old brother in UP’s Baghpat district is a stigma on the Govet and the system @BagpatDm @myogiadityanath pic.twitter.com/1QNMTMSRpO
— Komal karanwal (@Komalkaranwal_) August 28, 2022
இதனால் பதறிப் போன அதிகாரிகள் தங்கள் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என அஞ்சி ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். அந்த குழந்தையின் உடலை அந்த சிறுவன் கையில் ஏந்தி நடந்து செல்லும் வீடியோ பலரையும் கலங்கடிக்க வைத்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தலைமை மருத்துவ அதிகாரி, அமரர் வாகனம் வருவதற்கு சிறிது நேரம் காத்திருக்கமாறு குழந்தையின் தந்தையிடம் கூறியதாகவும், ஆனால் அவர் வாகனம் வர தாமதமானதால் அங்கிருந்து புறப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். குழந்தையை அந்த சிறுவன் கையில் தூக்கி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.