யூடியூப்பில் பல வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. சமையல், பொழுதுபோக்கு, பாட்டு, படம், ட்ரைலர், டீசர் என தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது யூடியூப். முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு ஒரு ஜிபி டேட்டாவை வைத்துக் கொண்டு எண்ணி எண்ணி செலவழித்த காலம் எல்லாம் போய் இன்று ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி டேட்டா கொடுத்தும் பற்றாக் குறைக்கு பூஸ்டர், Add on பேக்குகள் போட்டு உபயோகிக்கும் காலம் வந்துவிட்டது. நேரத்தை வீணாக விரையும் செய்வதில் யூடியூப்பின் பங்கு அளப்பரியது. கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு யூடியூப் மிகப்பெரிய வரம். மடியில் போனை வைத்துவிட்டு ரைம்ஸ் பாடலை போட்டு விட்டு பிள்ளைகள் அழுகையை சாமர்த்தியமாக நிறுத்தி உணவை ஊட்டும் மார்டன் தாய்மார்களுக்கு யூடியூப் ஒரு வரம்தான்.

கடுமையான போட்டி உள்ள ஒரு தளம் அதிலும் குறிப்பாக சமையல். எங்கு திரும்பினாலும் சமையல் வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. சிலர் டிக்டாக்கில் இருந்து யூடியூப் சேனல் ஆரம்பித்து இன்று லட்சக்கணக்கில் சம்பாதித்து கார் வாங்குவது, வீடு வாங்குவது என வாழ்க்கையை வளப்படுத்தி கொண்டு இருக்கின்றனர். ஆனால் நாம் பார்க்க போகும் இவர் சற்று வித்தியாசமனவர். சுமார் 27 லட்சம் பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் 23 வயதான TTF வாசன்தான்.நேற்று இவரது பிறந்தநாளை கொண்டாட திரண்ட கூட்டம்தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் வந்தால் எந்த அளவிற்கு கூட்டம் கூடி ஆர்பரிக்குமோ அந்த அளவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இவரது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள் என்று சொன்னால் அது ஆச்சரியம் தான்.

பைக் ரேஸ் ஓட்டிக் கொண்டு, போகும் வழியில் கஷ்டப்படுபவர்களுக்கு, ஏழைகளுக்கு உதவி செய்து பிரபலமானவர். பைக் மூலம் பல ஊர்களுக்கு பயணம் செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு பல ரசிகர்களை பெற்றுள்ளார். கல்லூரி படிக்கும் காலத்தில், தனது தந்தை மறைந்த பின்பு அவரது ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டத் தொடங்கிய இவருக்கு பைக் மீது காதல் பிறந்துள்ளது. கல்லூரி முடித்த பின்பு தனக்கென ஒரு பைக்கை வாங்கி வீலிங் செய்வது போன்ற சாகசங்களில் ஈடுபட்டு வந்தார். அதை யூடியூப் பக்கத்தில் பதிவிடவே அதிக பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர். இதனால் தொடர்ந்து பைக் பற்றி வீடியோக்களை பதிவிட தொடங்கியுள்ளார். ஹெல்மெட்டில் கேமிராவைப் பொருத்தி 200கி.மீ வேகத்தில் இவர் பறக்கும் வீடியோக்களை பார்க்கும் போது நாமே பைக்கில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக இவரது ரசிகர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் பைக்கிலேயே இவர் லடாக் வரை சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலானது.

யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாய் கொண்டு 11 லட்சம் மதிப்பில் சூப்பர் பைக் ஒன்றை வாங்கியுள்ளார் வாசன். நெடுஞ்சாலைகளில் 200கி.மீ வேகத்தில் பறப்பது தற்போதுள்ள இளம் வயதினருக்கு ஆர்வத்தை உண்டாக்குகிறது. த்ரில்லாக இருப்பதால் இவரின் வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுகிறது. உயர் ரக பைக் வாங்கி பறப்பது என்பது பல நடுத்தர குடும்க இளைஞர்களின் கனவு. அதை ஒருவர் நிஜத்தில் செய்து காட்டுவதால் தங்கள் கனவு நிஜமானது போலவே உணர்கின்றனர் இந்த கால இளைஞர்கள். மேலும் செல்லுகின்ற வழியில் உதவி செய்வது, ஹெல்மெட் போடாமல் வருபவர்களுக்கு அறிவுரை வழங்குவது, 3 பேர் இருசக்கர வாகனங்களில் செல்லக் கூடாது என அறிவுரை வழங்குவது போன்ற காரணங்களால், அதற்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.

ஆனால் இவ்வளவு அறிவுரை வழங்கும் வாசன் சாலை விதிகளை மதிக்காமல் 200 கி.மீ வேகத்தில் பறப்பது ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவுரைப்படி நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்களை குறைக்க கார்களுக்கு அதிகபட்ச வேகம் 120 கி.மீ என்றும், பைக்குகளுக்கு 80.கி.மீ தான் இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. ஆனால் பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக 200 கி.மீக்கும் அதிகமாக முறுக்குவது ஆபத்தை விளைவிக்கும். சமூக பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்படுவாரா வாசன்? அவரை பின் தொடரும் 2k கிட்ஸ்களும் இதை உணர்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி
Youtube Video Code Embed Credits: Twin Throttlers