ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் நடித்து பிரபலமானவர் நட்சத்திரா. கேரளாவைச் சேர்ந்த இவர் கிடா பூசாரி மகுடி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் படங்களில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் போகவே சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற நாடகத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். சினிமாவில் கிடைக்காத பேரும் புகழும் சின்னத்திரையில் அவருக்கு கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். யதார்த்தமான நடிப்பும், முக பாவனைகளும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. யாரடி நீ மோகினி சீரியல் முடிவடைந்த நிலையில் வள்ளி திருமணம் என்ற தொடரில் நடித்து வருகிறார் நட்சத்திரா.

இந்த நிலையில் நட்சத்திரா குறித்து அவரது நண்பரும் உடன் நடித்தவருமான ஸ்ரீநிதி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், நட்சத்திரா ஒரு பையனை காதலிக்கிறார், ஒரு மாதத்திலேயே நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது. ஆனால் எங்களுக்கு அது தெரியாது, நட்சத்திராவின் வாழ்க்கைய காப்பாத்த முடியல, என் நம்பரை பிளாக் பண்ண வச்சிட்டாங்க..நட்சத்திராவின் சம்பளம் 2.5 லட்சம் ஆனா அவ கணக்கில் 10 ஆயிரம் கூட இல்லை, இதெல்லாம் கேட்டதற்கு என்னை அடிக்கிறாங்க, திட்றாங்க, சித்து நிலைமை நட்சத்திராவுக்கு நடந்துடும்ன்னு பயமா இருக்கு என்றெல்லாம் தனது நெருங்கிய தோழி நட்சத்திரா பற்றி ஸ்ரீநிதி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை மறுத்து நட்சத்திரா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் என்னை யாரும் அடைத்து வைக்கவில்லை, ஸ்ரீநிதி மன அழுத்ததில் அவ்வாறு பேசுவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை நட்சத்திராவுக்கும், அவரது காதலர் விஷ்வாவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. விஷ்வாவும் திரைத்துறையை சேர்ந்தவர்தான். நாடகத்தில் பணிபுரியும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நட்சத்திரா தனது தாத்தா வீட்டில்தான் வளர்ந்துள்ளார். தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விரைந்து திருமணத்தை நடத்தும் கட்டாயத்தில் இருந்துள்ளார் இதனால் கடந்த வாரம் குடும்ப கோவிலில் வைத்து குடும்பத்தினர் முன்னிலையில் மிக எளிமையாக திருமணம் நடந்துள்ளது. சென்னையில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரது நண்பர்கள் தகவல்கள் தெரிவித்தனர்
