ஐஎன்எக்ஸ் வழக்கில் தொடர்புடைய முன்னாள் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியதை எதிர்ப்பு தெரிவித்து ஒய்வு பெற்ற அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு திறந்த மடல் ஒன்றினை எழுதியுள்ளனர்.
சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு, சிபிஐ விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
ஆனால் இந்த வழக்கில் அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கிய முன்னாள் அதிகாரிகளை விசாரிக்க நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வந்தது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு முன்னாள் அதிகாரிகளான நிதிஆயோக் அமைப்பி்ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சிந்துஸ்ரீ குல்லர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுப் கே பூஜாரி, நிதியமைச்சகத்தின் இயக்குநர் பிரபோத் சக்சேனா, பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் ரவிந்திரநாத் ஆகியோரை விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்கள் தங்களது பணி காலம் முடிந்து ஒய்வு பெற்றுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அரசு செயலாளர் கே.எம். சந்திரசேகர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், பஞ்சாப் முன்னாள் டிஜிபி ஜூலியோ ரிபேரியோ ஆகியோர் உட்பட 71 அதிகாரிகள் கையெப்பம்மிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், “குறுகிய கால அரசியல் பலனுக்காக முன்னாள் அதிகாரிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இது போல நேர்மையாக பணிபுரிந்த அதிகாரிகளை குறிவைப்பதன் மூலம், தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு மன உலைச்சல் ஏற்படும். இது போன்ற நடவடிக்கைகளால் அதிகாரிகளுக்கு உகந்த பாதுகாப்பு இல்லாத நிலை உருவாக கூடும். அன்றைய அரசின் கொள்கைகளை தான் அவர்கள் அமல்படுத்தியிருக்கிறார்கள். எனவே நீதி நிலை நாட்டப்படும் என நம்புகிறோம்” இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.