எழுத்தாளர் அமரர், கல்கியின் கைவண்ணத்தில் உருவான தமிழில் மிகப்பெரிய நாவல் தான் பொன்னியின் செல்வன். இது மொத்தம் ஐந்து பாகமாக வெளிவந்துள்ளது. இந்த கதையை முதலில் கல்கி ஒரு வார இதழில் எழுதி வந்தார். பின்னாளில் இது ஒன்றாக சேர்க்கப்பட்டு மிகப்பெரிய நாவலாக ஐந்து பாகங்களாக வெளிவந்தது. இந்த நாவலை படிக்காத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைவரிடத்திலும் பிரபலம். சோழர்களின் வரலாற்றை சில கற்பனை கதாபாத்திரங்களுடன் இணைத்து மிக சுவாரசியமாக எழுதி இருப்பார் கல்கி. இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்று பலர் எண்ணியிருந்த நிலையில் அந்த கனவை நிறைவேற்றி காட்டியுள்ளார் மணிரத்தினம். இந்தப் படம் தன்னுடைய 40 ஆண்டுகால கனவு என்றும் அது தற்போது நிறைவேறியதில் மகிழ்ச்சி என்றும் சமீபத்தில் பொன்னியின் செல்வன் டீச்சர் வெளியீட்டு விழாவில் அவர் பேசியிருந்தார்.

கடந்த வாரம் வெளியான இந்த டீசர் ஒரே நாட்களில் 9 மில்லியன் பார்வையாளர்களை அள்ளி சாதனை படைத்துள்ளது.இதன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார் பிரகாஷ்ராஜ், பார்த்திபன் போன்ற பலர் நடித்துள்ளனர். போர் காட்சிகள், குந்தவை மற்றும் நந்தினி சந்திப்பு, ஆதித்த கரிகாலனான விக்ரமின் காட்சிகள் என்று டீசரிலேயே மிக பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் மணிரத்தினம். தற்போது இந்த படத்தில் கமலஹாசன் பங்காற்றியுள்ளார் என்ற செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் டீசரில் கமலின் புகைப்படமோ, தோற்றமோ இல்லாததாலும் படக்குழுவின் பெயரில் அவர் இல்லாததாலும் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் கமலஹாசன் படத்திற்கு பின்னணி குரல் கொடுப்பவராக உள்ளார் என்ற செய்தியை மணிரத்னமே விளக்கியுள்ளார். அதாவது கேஜிஎஃப் படத்தில் பிரகாஷ்ராஜ் கதை முழுவதையும் பின்னணியில் விவரிப்பது போன்ற குரல் கொடுத்திருப்பார். அதேபோல பொன்னியின் செல்வன் படத்தில் கமலஹாசன் கதையை விவரிக்கும் குரலாக படம் முழுவதும் ஒலிக்க இருக்கிறார். இதேபோல மற்ற ஐந்து மொழிகளிலும் பொன்னியின் செல்வன் படத்தில் குரல் வல்லுனர்களை வைத்து கதை முழுவதையும் விவரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. கமலின் அழகான தமிழ் உச்சரிப்பும் கம்பீரக் குரலும் சோழர்களின் வரலாற்றையும் தமிழரின் பெருமையும் இந்த படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை
Video Courtesy: Indiaglitz