பிரபல நடன இயக்குனராக இருக்கும் ஜானி மாஸ்டர் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான ரன்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பணியாற்றி இருப்பவர் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

இவரது நடன அசைவுகள் திரை ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது. முண்ணனி நடன இயக்குனராக பணியாற்றி வந்த அவர், தற்போது கதாநாயகனாக படம் ஒன்றில் அறிமுகம் ஆக இருக்கிறார். விஜய் டமருகா ஆர்ட்ஸ் சார்பில் விஜய் பாஸ்கர், எம் ஸ்ரீ ஹரி, ஜி பனிந்தரா ஆகியோர் இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர். அறிமுக இயக்குனர் விஜய் சவுத்ரி என்பவர் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இன்று ஜானி மாஸ்டரின் பிறந்த நாள் என்பதால் அதை முன்னிட்டு அவர் நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது.

காவல்துறையில் பின்னணியில் ஆக்ஷன் காட்சிகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் காக்கி பேண்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து ஜானி மாஸ்டர் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சி தருகிறார். ஜானி மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்த படத்தின் இயக்குனர் விஜய்சவுத்ரி, “நடன இயக்குனர் ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், அவருடைய நடிப்புத் திறமை மற்றும் அப்பா மகன் இடையிலான சென்டிமென்ட் காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும். இது ஒரு வித்தியாசமான திரில்லர் திரைப்படம். மணி ஷர்மாவின் இசையில் அற்புதமான பாடல்கள் உருவாகி இருக்கிறது. ஜானி மாஸ்டரின் நடனம் இந்த படத்திற்கு ஹைலைட்டாக இருக்கும், படம் குறித்த மற்ற அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

ஹைதராபாத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இதன் கதை உருவாகி இருப்பதாகவும் இந்த கதை மிகவும் நன்றாக வந்திருப்பதாகவும் ஃப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் மிகவும் கவனமாக நடைபெற்று இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற ஜூலை இருபதாம் தேதி தொடங்க இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர்களான விஜயபாஸ்கர் என் ஹரி மற்றும் பனிந்திரா ஆகியோர் தெரிவித்து இருக்கின்றனர். விரைவில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். ஜானி மாஸ்டரின் இந்த முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் அவருக்கு கூறி வருகின்றனர். தமிழில் மாரி 2, டாக்டர், மாறன், எதற்கும் துணிந்தவன், திருச்சிற்றம்பலம், பீஸ்ட் மற்றும் வாரிசு உள்ளிட்ட பல படங்களில் ஜானி மாஸ்டர் கோரியோகிராஃபராக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.