திமுக தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற பேரணி நிறைவு பெற்றுள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இச்சட்டத்தின் மூலம் மதங்கள் அடிப்படையிலும், இனங்கள் அடிப்படையிலும் முஸ்லீம்கள் மற்றும் ஈழ தமிழர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

இச்சட்டத்திற்கு ஆதரவாக மாநிலங்களவையில் தமிழ்நாடு ஆளும் கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாமக வாக்களித்தது. இதனை தொடர்ந்து திமுக தலைமையில் நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நேற்றிரவு பேரணி நடத்த அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து இன்று காலை 10.39 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தாளமுத்து நடராஜன் மாளிகை வரை சென்றடைந்து நிறைவு பெற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், மா.கம்யூ மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக தலைவர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், மற்ற பிற அமைப்புகளும் கலந்துகொண்டனர்.
”இந்து, முஸ்லீம், கிறித்தவர் எல்லாம் எங்கள் ரத்தம்…” என பேரணியில் முழக்கத்தை எழுப்பினர். மேலும், பேரணி முடிவு பெற்ற பொழுது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “இது பேரணி அல்ல. போரணி” என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால், அரசியலுக்கு அப்பாற்பட்ட அனைவரையும் ஒன்று கூட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம். தோழமை கட்சிகள், பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பேரணி சிறப்பாக நடந்துள்ளது. பேரணியை தடுக்க முயன்று நம் விளம்பரத்திற்கு துணை நின்ற ஆளும் கட்சிக்கு நன்றி என கூறினார்.

மேலும் இந்தப் பேரணியில் கலவரம் ஏற்படாத வண்ணம் ‘ட்ரோன்’ கேமராவினை தமிழ்நாடு காவல்துறையினர் பயன்படுத்தி கண்காணித்தனர்.