20 ஆண்டுகளுக்குப் பின்பு வெளியான பாபா திரைப்படம் முதல் நாளிலேயே வசூலை அள்ளி குவித்திருக்கிறது. அந்த வசூல் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்தே எழுதி, தயாரித்து, நடித்து இருந்த படம்தான் பாபா. இந்தப் படம் 20 வருடங்கள் ஆகிவிட்டதால் சில கலர் எடிட்டிங் மற்றும் மெருகேற்றங்கள் செய்யப்பட்டு தற்போது ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று பல படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில் பாபா ஒரே நாளில் ஒரு கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. பழைய பாபாவை விட இந்த படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். பலரும் இந்த படத்திற்கு ஆதரவாக கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

பாபா திரைப்படம் எப்பொழுதும் இருக்கும் ரஜினியின் திரைப்படங்கள் போல் அல்லாமல் வித்தியாசமாக எடுக்கப்பட்டது. ரஜினிக்கு பாபாவின் அருளால் ஏழு மந்திரங்கள் கிடைக்கும். அந்த மந்திரங்களைக் கொண்டு ரஜினி எவ்வாறு சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறார் என்பது குறித்த படமே பாபா. தற்போது வெளியாகியிருக்கும் படத்தில் ஏழு மந்திரங்களை 5 மந்திரங்கள் ஆக குறைத்து இருக்கின்றனர். சில பாடல்களின் வரியையும் நீக்கி இருக்கின்றனர். மேலும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கின்றனர். இந்த மாற்றத்தை ரஜினி ரசிகர்களும் வெகுவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். நேற்று வெளியான இந்த படம் திரையரங்குகளில் நான்கு மணி முதல் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. ரஜினியின் மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, ராகவா லாரன்ஸ், சுரேஷ் கிருஷ்ணா, வைரமுத்து என அனைவரும் முதல் காட்சிகளை தியேட்டரில் வந்து பார்த்தனர்.

பாபா படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது. வெள்ளியன்று நாய் சேகர் ரிட்டன்ஸ், ஜீவாவின் வரலாறு முக்கியம் போன்ற பல படங்கள் வெளியாகின. ஆனால் புயல் இருந்த காரணத்தினால் பலரும் படத்தை பார்க்க வரவில்லை. இருந்தபோதிலும் இரண்டு படங்களும் அந்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இந்த நிலையில் நேற்று வெளியான பாபா திரைப்படம் ஒரே நாளில் சுமார் 80 லட்சம் வசூலை வாரி குவித்து இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் வந்தாலும் தலைவர் ஒரே நாளில் ஒரு கோடியை நெருங்கி இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று மட்டும் 80 லட்சம் வசூலான நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாள் என்பதால் இன்னும் ரசிகர்களின் வரத்து அதிகமாகி இருக்கிறது. எப்படியும் இந்த வாரத்திற்குள் இரண்டு கோடி வசூலை பாபா எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.