கடந்த இரண்டு நாட்களாக ப்ளூ சட்டை மாறனுக்கும், இயக்குனர் பார்த்திபனுக்கும் இடையே வார்த்தை போர் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பார்த்திபனை சீண்டும் விதமாக ப்ளூ சட்டை மாறன் ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள், உங்கள் படத்தை விளம்பரம் செய்ய வேறு ஏதேனும் வழியை தேடுங்கள் என்று அவர் பார்த்திபனை மீண்டும் கடுமையாக சாடியுள்ளார். இயக்குனர் பார்த்திபன் இயக்கி அவரே நடித்துள்ள படம்தான் இரவின் நிழல் இது உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் இல்லை என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருந்தார். இதற்கு பார்த்திபனும் 15 நாட்களுக்கு முன்பு ஸ்பெஷல் சோப் பார்க்க வந்தீர்களே? நீங்களாவது இதை எனக்கு சொல்லி இருக்கக் கூடாதா? உங்கள் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை என்று ப்ளூ சட்டை மாறனை கலாய்த்து தள்ளி இருந்தார்.

இந்தப் பிரச்சனைகளுக்கு இடையில் இந்த படத்தில் நடித்த பிரிகிடா சேரியில் கெட்ட வார்த்தை தான் அதிகம் பயன்படுத்துவார்கள், சினிமாவிற்காக ஏமாற்ற முடியாது, அவர்கள் எப்படி பேசுவார்களோ அதே போல் தான் காட்டப்பட்டுள்ளது என்று படத்தில் அதிகமாக கெட்ட வார்த்தை பயன்படுத்துவதற்கான விளக்கத்தை அளித்திருந்தார். இந்த சபிரச்சனை பூதாகரமானது. பலரும் பிரிகிடாவை கைது செய்ய வேண்டும் என்று ஹேஷ்டாக்குகளை போட்டனர். தவறை உணர்ந்து பிரிகிடா ட்விட்டரிலும் நேரிலும் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியிருந்தார். மேலும் தியேட்டருக்கு வந்து விளக்கம் அளித்து பார்த்திபனும் மன்னிப்பு கோரியிருந்தார். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் படத்தை விமர்சித்த ப்ளூ சட்டைக்கு எதிராக செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும், அவரது உருவ பொம்மை எரித்தும் பார்த்திபனின் ரசிகர்கள் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் ட்விட்டரில் பார்த்திபனை வம்பிழுக்கும் விதமாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதில் செருப்படி கொடுத்து புதுமையாக பாராட்டிய உங்களின் நாகரீக செயல் தொடரட்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் முகமது இஷாக் என்ற இயக்குனர் இயக்கிய அகடம் திரைப்படம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்திலேயே இடம் பெற்றுள்ளது. இதன் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 3 நிமிடங்கள் 30 வினாடிகள் என பதிவிட்டு உங்கள் பட படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இருந்தால் ஏன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவில்லை? என்ற கேள்வியும் ப்ளூ சட்டை மாறன் எழுப்பி இருக்கிறார்.

சேரி என்ற வார்த்தையை பிரிகிடா உபயோகப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டு ஒரு ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார் பார்த்திபன். அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து பார்த்திபனும் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இதை குறிப்பிட்ட மாறன் ஆரிய பண்பாட்டுக்குப் பிறகு சேரி என்னும் பெயர் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு என்னும் பொருளில் வழங்கப்பட்டு வருகிறது. நீங்களும் அதே வார்த்தையை உபயோகப்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள். உங்களுடைய படத்தை விளம்பரம் செய்ய வேறு வழிகள் உள்ளது என்று பார்த்திபனை கடுமையாக சாடியுள்ளார். மேலும் உலகின் முதல் மற்றும் சிங்கிள் அறிவு ஜீவி இயக்குனர் பார்த்திபனின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு செருப்படி கொடுத்திருக்கிறார்கள். இனி பார்த்திபன் படங்கள் எல்லாம் சூப்பர் என்று சொல்லிவிடுங்கள். இல்லாவிட்டால் செருப்பு மாலை உறுதி என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.


