நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல்களை ஒட்டி அங்கு தங்கியிருக்கும் வெளியூர் நபர்கள் நாளை (அக்.19) மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுக்க காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதில் தமிழ்நாட்டின் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுசேரியின் காமராஜர் நகர் தொகுதிகளும் உள்ளடங்கும். இவைகளுக்கு வருகிற 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளன.
இதற்காக தனி தனி குழு அமைத்து அனைத்து கட்சிகளும் வேலை செய்து வருகிறார்கள். இக்குழுக்களில் பெரும்பாலானோர் வெளியூர் ஆட்கள். இந்நிலையில் நாளை மாலை 6 மணியுடன் வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டுமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருந்து நாளை மாலை 6 மணியுடன் வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும். இடைத்தேர்தலுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் நிறைவு பெறும். சீமான் பேச்சு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இதுவரை அறிக்கை வரவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் திமுக எம்.எல்.ஏ சரவணகுமார் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சத்ய பிரதா சாகு அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.