நடிகர் ராஜ்கிரணின் சோஷியல் மீடியா பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அவர்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டு பிற சமுதாயத்தினருக்கு உதவி செய்து கொண்டு அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம இறைத்தூதர் நபிகள் அவர்களின் வார்த்தைகளையும் வாழ்க்கையும் பின்பற்றுவதால் தான் என்று பதிவிட்டு இருக்கிறார். திடீரென அவர் இப்படி பதிவிட்டு இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக நடிகர் ராஜ்கிரன் பற்றிய பதிவுகள் சோசியல் மீடியா தளங்களில் அவ்வப்போது வெளியாவதை காண முடிகிறது. வேட்டியை மடித்துக் கொண்டு கிராமத்து மண்வாசனை படங்களில் நடித்து பலரின் மனம் கவர்ந்தவராக இருக்கிறார் ராஜ்கிரண். சமீபத்தில் அவரின் மனைவியின் மகளாக இருக்கும் ஜீனத் பிரியா சின்னத்திரை நடிகர் முனீஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.
ஜீனத் தன்னுடைய மகளே கிடையாது அவர் தனது மனைவியின் மூத்த கணவரின் மகள் என்றும், தனது மகள் போல் பாவித்து வளர்த்து வந்த எனக்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது இனி தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனக் கூறி பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் இஸ்லாம் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் ஒரு பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார்.
அதில், “இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல. “இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்”, பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம். இந்தப் பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும். என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்தப் பதிவிற்கு பலரும் உங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை, உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க அல்லாஹ் உதவி புரிய வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். இதே போல சில மாதங்களுக்கு முன்பு திப்புசுல்தான் பற்றியும் இஸ்லாம் மதத்திற்கு மாறுவது பற்றியும் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் ராஜ் கிரண். அதில் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர் திப்பு சுல்தான். கோவிலின் மணி ஓசைக்கும் பள்ளிவாசலில் பாங்கு அழைப்புக்கும் சம மரியாதை தந்தவர். திருக்குரானின் போதனைளை தன் வாழ்நாளில் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தவர் திப்பு. அவர் பிற மதத்தினர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதை ஆதரிக்கவில்லை.
இறைவன் நினைத்திருந்தால் அனைத்து மதத்தினரையும் இஸ்லாமியராக படைத்திருக்க மாட்டானா என்ற கருத்தை முன் வைத்தவர் அவர். அவரவர் மார்க்கம் அவரவருக்கு என்ற கொள்கையை கொண்டவர். விடுதலைப் போரில் சரணடைய மறுத்து வீரத்துடன் போரிட்டு 11000 போர் வீரர்களுள் ஒரு வீரராக வீர மரணம் அடைந்தவர் என்று சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். தற்போது மீண்டும் இஸ்லாமியர்கள் குறித்து அவர் பதிவிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.!