கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள ஒரு செய்திதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் கூறிய ஒரு செய்தி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள ஒரு நிகழ்ச்சி. சமையல் என்றாலே டென்ஷன் எகிறும் ஆனால் ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு காமெடியாக கொண்டு செல்ல முடியும் என்று நிரூபித்துக் காட்டிய ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. சனி, ஞாயிற்று கிழமைகளில் வார இறுதி விடுமுறையை இந்த நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தத்தை போக்கி கொள்வதாக பலர் கூறுவதுண்டு.

அது போலத்தான் அந்த நிகழ்ச்சியில் வரும் நடுவர் வெங்கடேஷ் பட் ஒரு கருத்தைக் கூறினார். அதில் குழந்தை இல்லாமல் செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு சென்ற ஒரு பெண் மன ரீதியாக பாதிக்கப்பட்டு அழுத்ததில் இருந்ததாகவும், அருகில் இருந்த பெண் குக் வித் கோமாளியை பார்க்க சொல்லி பரிந்துரை செய்ததாகவும், அதனால் மன அழுத்தம் நீங்கி அவர் கர்ப்பம் தரித்துள்ளார் என்றும் இந்த செய்தியை தான் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்து கொண்டேன் என்றும் கூறினார். அதற்கு உடனே புகழும் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்க முயற்சித்த போது குக் வித் கோமாளி ப்ரோமா பார்த்து தனது முடிவையே மாற்றிக் கொண்டுள்ளதாக கூறினார்.

இருவர் கூறிய கருத்துக்களும் சோசியல் மீடியாவில் மிகுந்த கேலிக்குள்ளாக்கப்பட்டன. இருவரையும் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். மீம்ஸ்கள் பறந்தன. தற்போது வெங்கடேஷ் பட் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார், அதில் இரண்டு நாட்களாக நான் மனதளவில் நொறுங்கிவிட்டேன் ஏனென்றால் அவர்கள் என்னை கலாய்க்கிறார்கள் என்பதற்காக அல்ல, மனிதம் செத்துவிட்டதே என்று எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறேன், குழந்தை செல்வம் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று, அது இல்லாதவர்கள் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், மீம் கிரியேட்டர்ஸ் எனக்காக அல்ல, உயிரை சுமக்கும் பெண்ணுக்காக கேட்கிறேன், என்னை கிண்டல் செய்வதாக எண்ணி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள் என்று பட் கூறியுள்ளார்.

மேலும் தனக்கும் 7 ஆண்டுகள் கழித்து தான் குழந்தை பிறந்தது என்றும், ஒரு ஒரு நொடியும் ஒரு யுகமாய் நகரும் என்றும் அவர் பட்ட வேதனையை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே செயற்கை கருத்தரிப்புக்கு சென்ற பலர் மன அழுத்ததில் இருந்த போது குக் வித் கோமாளி எங்களுக்கு ஆதரவாக இருந்தது உண்மைதான் என்று பட்டுக்கு ஆதரவாக பகிர்ந்து இருந்தனர். அதே போல் குரேஷி மற்றும் ஷிவாங்கியும் தங்களிடம் கூட இவ்வாறு பலர் கூறியுள்ளனர் அதனால் வெங்கடேஷ் பட்டை திட்ட வேண்டாம் என்று பட்டுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.