தான் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தற்போது விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது “தமிழக வெற்றி கழகம்” என்கிற அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார். மக்களின் பேராதரவோடு இந்த கட்சியை தொடங்கியிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் விஜய். ஊழல் ஒரு பக்கம், சாதி மதங்களால் மனிதர்களைப் பிரிக்கும் அரசியல் மறுபக்கம். இதை களைவதற்கு அரசியல் கட்சி தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

விரைவில் கட்சிக்கான கொள்கைகள், கொடி, சின்னம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்றும், வருகிற 2024ம் ஆண்டு தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை. 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஒன்றே நமது இலக்கு, விரைவில் ஆட்சியைப் பிடித்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த செய்வோம் என்று சபதம் எடுத்திருக்கிறார் விஜய். மேலும் அரசியல் தனக்கு பொழுதுபோக்கல்ல, அது என்னுடைய வேட்கை. கடைசியாக ஒப்புக்கொண்ட படத்துடன் திரைத்துறையிலிருந்து விலகி, முழுமையாக அரசியல் பணிகளில் ஈடுபட பொறுப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியில் இருந்தனர்.

விஜயின் அரசியல் வருகையை பலரும் பாராட்டி இருந்த நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெயரில் பிழைகள் இருப்பதாகவும், தமிழ்நாடு என்பதே சரியானது. ஆனால் தமிழகம் என்று வைத்திருப்பதாகவும் விஜயை விமர்சித்து வந்தனர். ஆனால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத விஜய், தற்போது தனது கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், “அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த மதிப்பிற்குரிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நன்றி.

மேலும் ஊக்கம் அளிக்கும் ஊடகவியலாளர்கள், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்’ என அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன், பணிவான வணக்கங்கள்” அன்புடன் விஜய் என்று கையொப்பமிட்டு அந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அவரின் அந்த அறிக்கை தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
— TVK Vijay (@tvkvijayoffl) February 4, 2024
Twitter Original Source From: TVK Vijay