படம் வெளியாவதற்கு முன்பாக தஞ்சைக்கு சென்று பெருவுடையாரின் ஆசியை வாங்க இருப்பதாக நடிகர் விக்ரம் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது நண்பன் வந்திய தேவனையும் தனது தம்பியான அருள்மொழி வர்மனையும், தங்கை குந்தவையையும் அவர் துணைக்கு அழைத்து ஒரு ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார். மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக நடிகர் கார்த்திக்கும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் கடந்த ஆறாம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த், இயக்குனர் சங்கர் போன்ற தமிழின் முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் பங்கெடுத்திருந்தனர். இந்த விழாவில் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. ட்ரைலர் வெளியாகி குறுகிய காலத்திலேயே பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது. ஏற்கனவே பொன்னி நதி என்ற பாடலும், சோழா சோழா என்ற பாடலும் வெளியாகி இருக்கிறது. இரண்டும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ட்ரைலரும் மிகுந்த எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதால் படத்திற்கான பிரமோஷனை பட குழு விரைவில் துவங்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர்கள் விரைவில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.

இதையடுத்து சீயான் விக்ரம் தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவிலுக்கு செல்ல இருப்பதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர் தஞ்சைக்கு வருகிறேன், எட்டுத்திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன், பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான், என்ன நண்பா வருவாய் தானே? அப்படியே அந்த அருள்மொழிவர்மனையும் இழுத்து வா என்று த்ரிஷா, கார்த்திக் மற்றும் ஜெயம் ரவியை டேக் செய்து ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார். அதை விக்ரம் ரசிகர்கள் பலரும் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர்.
