
ராஜீவை நாங்கள் கொலை செய்யவில்லை என்றால் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்யாதது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஆமாம்… நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
சீமானின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சிறையில் இருக்கும் ஏழு பேர் விடுதலைக்கு சீமானின் இந்த பேச்சு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழின உணர்வாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், தன்னுடைய பேச்சை திரும்ப பெற போவதில்லை என திட்டவட்டமாக சீமான் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் , விடுதலைப் புலிகள் சார்பில் லதன் சுந்தரலிங்கம், குருபரன் சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள், அதில், ”இந்திய தலைமையை சீர்குலைக்கும் திட்டமோ, இந்தியாவை தாக்கும் திட்டமோ என்றுமே புலிகளிடம் இருந்ததில்லை என்றும் இலங்கையைச் சார்ந்த எந்தவொரு நபருக்கோ, தலைவருக்கோ, எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை. திட்டம் தீட்டவுமில்லை. குறிப்பாக எந்தவொரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராக செயற்பட நாங்கள் எப்போதும் எண்ணியதில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.