மாணவர்களை தொழில்முனைவோராக மாற்றவும், புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் ஊக்குவிக்கும் வகையில் இம்முடிவை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு எடுத்துள்ளது.
மாணவர்களின் வருகை பதிவேடு குறைவாக இருப்பினும் அவர்களை தேர்வெழுத அனுமதிக்குமாறு பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அறிவுறுத்தியுள்ளது.
வேலை தேடும் கலாச்சாரத்தை விட்டொழித்து, வேலைகளை வழங்கும் கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்கத்தில் இந்த முடிவினை எடுத்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழில் முனைவோராக உருவாக்கும் ஆற்றல் படைத்த மாணவர்கள், சராசரியை வருகை பதிவை விட குறைவான சதவிகிதத்தை கொண்டிருந்தாலும் கல்லூரி மற்றும் தொழில் கல்வி நிறுவனங்கள் அவர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “மாணவர்கள் தங்களது விருப்ப தொழிலை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, செமஸ்டர் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு விடுப்பு அளிக்க கல்வி நிறுவனங்கள் தாயாராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் மாணவர்கள் படிப்பை மீண்டும் தொடரவும் அனுமதிக்க வேண்டும்.
புதிய தொழிலை துவங்க முயற்சிக்கும் நேரத்தில் மாணவர்கள், கல்வி நிலையத்தில் கூடுதல் நன்மதிப்பை பெறுவார். மாணவர்களால் அமைக்கப்பெற்ற தொழிலை மதிப்பாய்வு செய்ய கல்வி நிலையங்கள் மறுஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். மேலும் தொழிலின் முன்னேற்றத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு கூடுதல் நன்மதிப்பு வழங்குவது குறித்து நிறுவனங்கள் பரிசீலிக்கலாம்.
அதேபோல தொழில் முனையும் மாணவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வளாகத்திற்குள் தங்கிக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். மேலும் தொழில் தொடங்க முனைப்போடு இருக்கும் மாணவர்களுக்கும், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருக்கும் நிறுவங்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த கல்வி நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் தொழிலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையம், சவால்களையும் புரிந்துகொண்டு அவர்களது தொழிலில் அதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பின்மையும், புதிய தொழில் வளர்ச்சியும் இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இத்தகைய முடிவால், மாணவர்களின் தொழில் தொடங்கும் திறமை மேலும் அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.