நீண்ட காலமாக சர்வதேச போட்டியில் இடம் பெறாமல் இருந்த பிராவோ தற்போது மேற்கிந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
36 வயதான பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதாலும் காயங்கள் காரணமாகவும் கிரிக்கெட் சங்கத்துடனான மோதல்களாலும் அவரால் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாட முடியாமல் போய்விட்டது.

ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகக் கடந்த அக்டோபர் மாதம் அவர் அறிவித்தார். பிறகு, கடந்த மாதம் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார் பிராவோ.
இதனை தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார் பிராவோ. கடைசி ஓவர்களில் அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்துவதற்காக பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார் என்று மே.இ. தீவுகள் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ரோஜர் ஹார்பர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிராவோ தெரிவிக்கையில், “மீண்டும் தேர்வானதற்கு மிக்க மகிழ்ச்சி. மீண்டும் குழந்தை போல உணர்கிறேன். மே.இ. தீவுகள் கிரிக்கெட்டில் தலைமை மாறியபோது இதை நான் எதிர்பார்த்தேன். என் திறமையை வெளிப்படுத்த ஆவலாக உள்ளேன்” என்றார்.
மேலும் கூறுகையில், “வயதாகிவிட்டதால் முன்பு போல வேகமாகப் பந்துவீச முடியாது. ஆனால், இப்போது நான் புத்திசாலித்தனமான பந்துவீச்சாளராக மாறியிருக்கிறேன். கிரிக்கெட் தொடர்பான வியூகங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளேன்” எனவும் தெரிவித்துள்ளார்.