விடாமுயற்சியின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தாமதமாகி கொண்டே செல்வதால் படத்தில் இருந்து விலக லைகா முடிவெடுத்து இருப்பதாக தற்போது தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி படத்தை தயாரிக்க இருப்பதாக லைகா நிறுவனம் பல மாதங்களுக்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் குஷியில் இருந்தனர். தயாரிப்பாளர் போனி கபூருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என்று அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் அஜித் லைகா நிறுவனத்துடன் இணைந்தது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பட்ஜெட்டுக்கு பஞ்சமில்லாமல் லைகா நல்ல திரைப்படங்களை தமிழ் திரையுலகத்திற்கு கொடுத்து வருவதால் அஜித்தின் அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் இந்த படம் தொடங்கியது முதலே பல குழப்பங்கள் நீடித்து வருகிறது ஆரம்பத்தில் விக்னேஷ் சிவனை இயக்குனராக அறிவித்த லைகா நிறுவனம் அஜித்திற்கு கதை படிக்காத காரணத்தினால் அவரை நீக்கியது. தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனியை இயக்குனராக களம் இறக்கி இருந்தது. அதன் பின்னர் பல மாதங்களாக எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் நடுவில் விடா முயற்சி என்று படத்தின் பெயரை அறிவித்து போஸ்டர் மட்டும் வெளியானது. இதனால் லைகா நிறுவனம் தற்போது கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் தற்போது மேலை நாடுகளில் பைக் சாகசத்திற்காக சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்தவுடன் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இன்னும் திரும்பி வந்ததாக தெரியவில்லை.

லைகா தயாரித்த மிகப்பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் மூன்று மாதத்திற்குள் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஐஸ்வர்யா தொடங்கிய லால் சலாம் ஷூட்டிங் முடிந்துவிட்டது. சந்திரமுகி பாகம் இரண்டும் இந்தியன் 2 படமும் விரைவில் முடிவடைய இருக்கிறது. ஆனால் பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விடா முயற்சி இன்னும் தொடங்காமலேயே இருந்து வருகிறது. அஜித் மீண்டும் சென்னைக்கு வந்து படப்பிடிப்புகளை தொடங்க இன்னும் காலதாமதம் ஆகும் என்ற தகவலால் லைகா நிறுவனம் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. படம் தொடங்குவதற்கு முன்பே டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் விற்றுவிட்டதால் லைகாவால் விலக முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.