ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல மாநில சட்ட மன்ற தேர்தல்களில் தோல்வி மற்றும் தொடர்ச்சியாக இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் வீழ்ச்சி ஆகியவற்றால் துவண்டு போயிருக்கிறது காங்கிரஸ் கட்சி. சமீபத்திய நாடாளுமன்ற தோல்வி காரணமாக தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.
தற்போது ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலுகாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வார் என்று அம்மாநில தலைவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்றவாறே காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வோர் பட்டியலில் ராகுல் காந்தியின் பெயர் இடம்பெற்றிருந்தது.

ஆனால் திடீரென அவர் வெளிநாடு பயணமாக கொலம்பியா சென்றிருப்பது, தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் அபிலாஷ் மனு தெரிவிக்கையில், “அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும், பொது வாழ்க்கையையும் கலந்து, பொருத்தி பார்க்க கூடாது. அனைவருக்கும் சுதந்திரம் மற்றும் தனி உரிமை வழங்கப்பட வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.
ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவை படும் போது வருவார் என காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. ஆனால் இது சமூக வலைத்தளங்களில் மிக பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மிக பெரிய நெருக்கடி உருவாக்கி உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கும் கடுமையான சவால் மிக்க நேரமாக இருக்கையில் ராகுல் காந்தியின் அறிவிக்கப்படாத பயணம் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.